×

ஒரு வழிப்பாதையில் சென்றதை கண்டித்ததால் காவலாளியை கட்டையால் சரமாரி தாக்கி தரதரவென இழுத்து சென்ற வாலிபர்கள்: கோயம்பேடு மார்க்கெட்டில் பரபரப்பு

வளசரவாக்கம்: கோயம்பேட்டில் காய்கறி, பழம், பூ மற்றும் உணவு தானிய மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு அங்காடி நிர்வாகம் சார்பில், சுமார் 93 காவலாளிகள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு வாக்கி டாக்கி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த ஒரு பிரச்னை நடந்தாலும் அங்காடி நிர்வாக காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் கொடுக்கலாம். அதே போல் காவாளிகள் வேலை செய்வதை காவல் கட்டுபாட்டு அறைகள் மூலம் கண்காணித்து வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவிப்பார்கள்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கோயம்பேடு மார்கெட் 5வது கேட்டில் வடமாநிலத்தை சேர்ந்த சம்புகுமார் (25), பணியில் இருந்தபோது, அந்த வழியாக பைக்கில் சென்ற இருவரிடம், ‘‘இது ஒரு வழிபாதை. இவ்வழியாக செல்ல கூடாது,’’ என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், ‘‘எங்களை தடுத்து நிறுத்த நீ யார்,’’ என்று கேட்டு, அங்கு கிடந்த கட்டையை எடுத்து சரமாரியாக தாக்கினர். பின்னர், நடுரோட்டில் அவரை தரதரவென சிறிது தூரம் இழுத்து சென்றனர்.

பின்னர், அவரை விட்டுவிட்டு, இருவரும் தப்பி சென்றனர். இந்த காட்சியை அங்கு நின்று கொண்டிருந்த கூலி தொழிலாளிகள் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். படுகாயமடைந்த சம்புகுமார், அங்காடி நிர்வாக அலுவலகத்தில் புகார் செய்தார். இதையடுத்து, கோயம்பேடு மார்க்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை அங்காடி நிர்வாகத்தினர் ஆய்வு செய்தபோது, பதிவான காட்சிகளை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அங்காடி நிர்வாகம் சார்பில் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கோயம்பேடு மார்க்கெட்டில் சுற்றிதிரிந்த அந்த 2 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வசந்த்குமார் (29), ராஜேஷ் (34) என்பதும், கோயம்பேடு பழ மார்க்கெட்டில் தங்கி கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

The post ஒரு வழிப்பாதையில் சென்றதை கண்டித்ததால் காவலாளியை கட்டையால் சரமாரி தாக்கி தரதரவென இழுத்து சென்ற வாலிபர்கள்: கோயம்பேடு மார்க்கெட்டில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Coimbed Market ,Vegetable, Fruit, Flower and Food Grain Market ,Coimbet ,Dinakaran ,
× RELATED கோயம்பேட்டில் செல்போன் கடையை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது